Friday, April 30, 2010

ராமலக்ஷ்மி போட்ட மேக்கப்!

நான் வெளியிட்ட படத்துக்கு ராமலக்ஷ்மி மேக்கப் போட்டு எனக்கு அனுப்பி வச்சிருந்தார். அதை வெளியிட்டிருக்கேன். இரண்டுக்கும் உள்ள ஆறு வித்தியாசம் இப்போச் சொல்லியாகணுமாக்கும்!

நாங்க தங்கின வீடு!

இதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.
என்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க! காப்பாத்துப்பா!

Monday, April 26, 2010

விட்டு விடு கறுப்பா!

என்னோட அப்பாவின் ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையோரம் இருக்கும் படாளம்மன் கோயிலில் உள்ள கறுப்பண்ண சுவாமி. இவரைப் படம் எடுக்கணும்னு பையர் சொன்னதும் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மாவே இருந்தது எனக்கு. அப்புறமா பூசாரி கிட்டே கேட்டோம். தாராளமா எடுக்கலாம்,அப்படினு உத்தரவு கொடுத்தார். படாளம்மனை மட்டும் எடுக்க முடியலை. அவளோட தர்பாரில் இவர் முக்கிய சேனாதிபதி! அபிஷேஹம் கிடையாது இவருக்கு. எங்க வீட்டுக் கல்யாணங்களில் முதல் பத்திரிகையை இவருக்குக் கொடுத்துடணும். இல்லாட்டிக் கோவிச்சுப்பார். அதுவும் பாக்கு, பழம் வைச்சுக் கொடுக்கணும். என் கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணா, தம்பி கல்யாணங்களிலே கொடுக்க முடியலைனு அம்மா கடைசி வரையிலே சொல்லிண்டே இருந்தா. இப்போ வருஷா வருஷம் போயிட்டு வராங்க அண்ணா, தம்பி குடும்பத்தோடு. எங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை இருந்ததால் நிறைவேற்றப் போனோம்.
படாளம்மன் கோயிலின் ஒரு பக்க நுழைவு வாயில். அந்தப் பக்கம் தெரியறது வராஹ நதி. நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் நுழைஞ்சுடும். இத்தனைக்கும் கோயிலில் இருந்து நதிக்குப் போகும் படித்துறையில் இருபது படிகளுக்கும் மேல் இருக்கு. மேல்படி அரை அடி அகலமே. கொஞ்சம் கால் வழுக்கினால் கீழே வராஹ நதிக்கரையோரம், புறாவே உந்தன் நினைவில்னு பாடிட்டுப் போகணும்! என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க! பசும்பால் தான் அந்தப் பக்கமெல்லாம். மாடெல்லாம் சின்னதாய் இருந்தாலும் அருமையான சுவையோடு கூடிய பாலை நிறையத் தரும்.

Thursday, April 22, 2010

வராஹ நதிக்கரையோரம்!

2007-ம் வருஷம் டிசம்பரில் ஆறுபடை வீடுகளுக்குப் போனோம். அப்போ என்னோட அப்பாவின் பூர்வீக ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிப் போனோம். அங்கே இருந்த படாளம்மன் கோயில் வராஹ நதிக்கரையோரம் உள்ளது. கோயிலின் ஒரு வாசல் வழியாக நதியில் இறங்கும்படி இருக்கும். நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் வந்துடும். இது நாங்க முதல்லே போகறதுக்காகத் தொலைபேசியில் சொன்னப்போ கோயிலுக்குள்ளே வெள்ளம் இருக்கு வடியட்டும்னு சொன்னாங்க. வடிஞ்சு நாலு நாள் கழிச்சுப் போனோம். அப்போவும் நதியில் தண்ணீர் இருகரையும் தொட்டுக்கொண்டு போனது. இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே. மாடுகளுக்குப் பறிச்சுட்டுப் போற பசும்புல்லைப் பார்த்தாலே பாலின் சுவை நாக்கில் ஊறும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். கொடைக்கானல் சில கிலோமீட்டர்கள் தான்.

Sunday, April 4, 2010

பூ, பூவாப் பூத்திருக்கு!

இந்த வாழைப்பூவைப் பார்த்தீங்களா?? இது வாழை மரத்தின் கன்று என நினைச்சு இலைகளை எல்லாம் வெட்டி விட்டதும் ஏற்கெனவே வந்த கண்ணாடி இலையில் இருந்த பூ. மினி வாழைப் பூ. மிக மிகச் சின்னது. ஒரு சாண் கூட இல்லை. கிட்ட வச்சுப் படம் எடுத்தேன். படம் எடுத்தும், காய்கள் வந்தும் ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு. போட முடியலை. சின்னக் காய்கள். குழந்தையின் விரல்கள் போல. மரத்தின் இலைகளைச் சீய்த்து விட்டும், விடாமல் தன்னுள்ளே இருந்த கருவை வெளிக்கொணர்ந்து விட்டது.
மிக மிகச் சிறிய இந்தப்பூவின் அளவையும், காய்களின் அளவையும் பார்க்கிறச்சே அவசரப் பட்டுத் தப்பாய் வெட்டிட்டாரோனு மனசு சங்கடப் பட்டது. இந்தப் பூவோ, காய்களோ பயன்படாது. இப்போ இந்த மரத்தையே வெட்டியாச்சு. இலைகளை வெட்டினதும் பூமியில் இருந்த இந்தக் கன்று அழுகிவிட்டதுனு நினைச்சு அடியோடு வெட்ட இருந்த வேளையில் பூவும், காயும் வந்து கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்தது. :(